Thursday, December 17, 2009

புகைப்படக் கருவி ஒன்றின் சிறப்பியல்புகள் - 1

வேகமான தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக புகைப்படக் கருவிகளின் திறனும் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது. இன்றைய சந்தையில் காணப்படும் ஒவ்வொரு கமெராவும் பல்வேறு வகையான சிறப்பியல்புகளுடன் (features) வெளிவருகின்றன. இவ் இயல்புகள் கமெராவின் வகை (type) , உற்பத்தியாளர் (brand) என்பவற்றைப் பொறுத்து வேறுபடும். இவ் இயல்புகள் தொடர்பான அறிவு, கமெரா ஒன்றை வாங்குவதற்கும், அதனை உபயோகிப்பதற்கும் மிகவும் அவசியமாகும். இந்த பதிவில் இன்றைய புகைப்படக் கருவிகளில் காணப்படும் பொதுவான சில இயல்புகளைப் பற்றி (features) பார்ப்போம்.

பிரிதிறன் (Resolution)

பிரிதிறன் என்பது ஒரு கமெராவினால் உருவாக்கக் கூடிய படம் ஒன்றின் துல்லியமாகும்.  இது மெகா பிக்சல் (megapixel) மூலம் அளவிடப்படும். மெகா பிக்சல் பற்றிய விளக்கத்தை கடந்த பதிவில் பார்த்தோம்.  படங்கள் பிக்சல் என்னும் நுண் ஒளிர் புள்ளிகளால் ஆனவை.   3.1 மெகா பிக்சல் கமெராவின் மூலம் எடுக்கப்படும் படமானது 2048 நிரல்களிலும் (Columns) 1536 நிரைகளிலும் (rows) அமைந்த 3145728 பிக்சல்களால் உருவாக்கப்படுகின்றது. மெகா பிக்சல் அதிகரிக்கும் போது படத்தின் துல்லியம் அதிகரிக்கும். மேலும் மெகா பிக்சல் அதிகரிக்கும் போது படத்தின் அளவும் அதிகரிக்கும்.

கணனி ஒன்றின் முழுத் திரையில் பார்க்கும் அளவிலான தெளிவான புகைப்படங்களை எடுக்க 2MP உள்ள கமெரா போதுமானது. 3.1 MP கமெராவால் எடுக்கப்படும் படத்தை 5" X 7" அளவுள்ள தாளில் தெளிவாக தெரியும் வகையில் அச்சிடலாம். மிகப் பெரிய அளவில் அச்சிட வேண்டிய தேவை ஏற்படும் போது அதிக அளவிலான மெகா பிக்சல் உள்ள கமெரா தேவைப்படும்.  கீழே உள்ள படமானது மெகா பிக்சல் அதிகரிக்கும் போது படத்தின் அளவு எவ்வாறு வேறுபடுகின்றது என்பதைக் குறிக்கின்றது.


 image source - howstuffworks.com
தற்போது 5 MP தொடக்கம் 30 MP வரையிலான கமெராக்கள் சந்தையில் கிடைக்கின்றன. பொதுவாக நிபுணத்துவ புகைப்படக் கலைஞர் ஒருவரின் தேவைக்கு 6 MP - 13MP இடையிலான கமெராவானது தாராளமாகப் போதுமானது.

உணரி (Sensor)

முன்னைய பதிவிலே குறிப்பிட்டபடி, உணரியானது கமெரா ஒன்றினால் உருவாக்கப்படும் படத்தின் தன்மையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்கால கமெராக்களில் பொதுவாக CCD, CMOS என இரண்டு வகையான உணரிகள் பயன்படுத்தப்படுகின்றன. CCD உணரியை உடைய கமெராக்களினால் உருவாக்கப்படும் படங்கள் அதிக துல்லியமானவை.

ஒளியியல் உருப்பெருக்கம் (Optical Zoom)

இது குறிச்சூட்டுக் கமெராக்களில் (Point and shoot camera) பொதுவாகக் காணப்படும் ஒரு இயல்பாகும்.தொலைவில் உள்ள பொருட்களை வில்லைகளின் (lens) மூலம் உருப்பெருக்கத்தின் மூலம் பெரிதாக்கி பதிவு செய்தலை இது குறிக்கும். உருப்பெருக்கமானது மடங்குகளில் குறிப்பிடப்படும். உதாரணமாக ஒரு கமெராவின் ஒளியியல் உருப்பெருக்கம் 4X என குறிப்பிடப்பட்டிருப்பின், அந்த கமெராவானது தொலைவில் உள்ள ஒரு பொருளின் விம்பத்தை நான்கு மடங்கு பெரிதாக்கி படமாக தெளிவாகப் பதிய வல்லது என அர்த்தம்.  தற்போது 3X தொடக்கம் 24X வரையான உருப்பெருக்க அளவுகளில் குறிச்சூட்டுக் கமெராக்கள் கிடைக்கின்றன.  ஒளியியல் உருப்பெருக்கத்தின் மூலம் படத்தின் தெளிவில் மாற்றம் ஏற்படுவதில்லை. உருப்பெருக்கம் அதிகரிக்க கமெராவின் அளவும் அதிகரிக்கும்.ஒளியியல் உருப்பெருக்கத்தால் விம்பத்தில் ஏற்படும் மாற்றத்தை கீழே உள்ள படத்தை பார்த்தால் புரியும்.


image source - scrapjazz.com

SLR கமெராக்களில் வெவ்வேறு குவிய நீளங்களை (Focal length) உடைய வில்லைகளை (lens) இணைப்பதன் மூலம் உருப்பெருக்க அளவை தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்க முடியும்.

எண்ணியல் உருப்பெருக்கம் (Digital Zoom)

எண்ணியல் உருப்பெருக்கமானது தொலைவில் உள்ள பொருளை அண்மையில் கொண்டு வருவதில்லை. மாறாக கமெராவின் திரையில் தெரியும் விம்பமானது எண்ணியல் முறையில் செதுக்கப்பட்டு (crop) பெரிதாக்கப்படுகின்றது. இம் முறையில் உருப்பெருக்கம் செய்யும் போது படத்தின் தரமும், தெளிவும் கீழே உள்ள படத்தில் காட்டியவாறு குறையும்.


image source - scrapjazz.com

உண்மையிலே எண்ணியல் உருப்பெருக்கமானது கமெராவின் உபயோகத்திற்கு தேவையற்ற ஒரு வசதியாகும். ஒரு படத்தை எடுத்த பின்பு விம்பத்தை செம்மைப்படுத்தும் மென்பொருட்கள் (image editing software)  மூலம் இவ் வசதியை நாம் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே கமெரா வாங்கும் போது எண்ணியல் உருப்பெருக்கம் பற்றி அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை.

விம்ப நிலையாக்கம் (Image stabilization)

ஒரு பொருளைப் புகைப்படம் எடுப்பதற்காக நாம் கமெராவை இயக்கும் போது எமது கைகளில் ஏற்படும் அதிர்வு காரணமாக எடுக்கப்படும் படத்தில் தெளிவின்மை (blur) ஏற்படக்கூடும். இதனைத் தடுப்பதற்காக நவீன கமெராக்களிலே விம்ப நிலையாக்கம் (Image stabilization) எனும் உத்தி பயன்படுத்தப்படுகின்றது. கமெராக்களில் இந்த உத்தியானது உருப்பெருக்கத்தைப் போல ஒளியியல் முறையிலும் (Optical image stabilization), எண்ணியல் முறையிலும் (Digital image stabilization)  கையாளப்படுகின்றது. ஒளியியல் விம்ப நிலையாக்கத்தை கொண்டுள்ள கமெராக்கள் அதிக உபயோகம் வாய்ந்தவை.

காமெராக்களின் சிறப்பியல்புகளில் சிலவற்றையே மேலே பார்த்தோம். கமெரா தொடர்பான இன்னும் பல சிறப்பியல்புகளை அடுத்த பதிவில் பார்ப்போம். 

Friday, December 11, 2009

புகைப்படக் கருவி எவ்வாறு தொழிற்படுகின்றது?

புகைப்படக் கருவியை வைத்திருக்கும் நாம் எல்லோரும் அது எவ்வாறு தொழிற்படுகின்றது என அறிந்திருத்தல் மிகவும் பயனுள்ள விடயமாகும்.  கமெரா ஒன்றின் அடிப்படைப் பகுதிகள் கீழே காட்டியவாறு அமைந்திருக்கும்.



நாம் கமெராவை ஒரு பொருளின் மீது குவியப்படுத்தும் (focus) போது பொருளில் இருந்து தெறிப்படையும் ஒளிக்கதிர்கள் (Light rays) கமெராவின் வில்லைகளின் (lens) ஊடாக பயணித்து ஆடி ஒன்றில் (flip-up mirror) தெறிப்பு அடைந்து கமெராவின் பார்வைப்பகுதியை (view finder) அடைந்து விம்பமாக (image) பிரதிபலிக்கின்றன. பார்வைப்பகுதியில் தெரியும் விம்பத்தை அவதானித்து எமது புகைப்பட  தேவைக்கு ஏற்றவாறு கமெராவை சரிசெய்து (adjusting the settings) கமெராவின் பொத்தானை (shutter button) அழுத்தும் போது தெறிப்பு வில்லையானது ஒளிக்கதிரின் பாதையில் இருந்து விலகி விம்பமானது உணரியின் (sensor) மீது படுவதற்கு வழி அமைக்கும். அதே வேளையில் உணரிக்கு முன்னால் இருக்கும் மூடியானது (shutter) திறந்து கொள்ளும். இந்த இரண்டு செயற்பாடுகளும் ஒரே கணத்தில் நடைபெறும்.



வில்லையின் ஊடாக உட்புகும் ஒளியின் அளவானது துவாரம் (Aperture)  ஒன்றின் ஊடாக கட்டுப்படுத்தப்படக் கூடியது . மேலும் உணரிக்கு முன்னால் இருக்கும் மூடியானது திறந்து மூடும் வேகமும் (shutter speed) கட்டுப்படுத்தப்படக் கூடியது. துவாரத்தின் அளவும் (Aperture), மூடியானது திறந்து மூடும் வேகமும் (shutter speed) புகைப்படம் ஒன்றின் தன்மையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை பற்றி பிறிதொரு பதிவில் விபரமாக பார்க்கலாம்.

உணரியானது தன் மீது படும் ஒளிக்கதிர்களை ஏற்றம் பெற்ற இலத்திரன்களாக (charged electrons) மாற்றும். பொருளில் இருந்து வரும் ஒளிக்கதிரின் செறிவு, தன்மை என்பனவற்றிற்கு ஏற்ப ஒவ்வொரு இலத்திரனின் ஏற்ற அளவும்  வேறுபடும். ஏற்றம் பெற்ற இந்த இலத்திரன்கள் அனலாக் தரவுகளாக (analog data) சேமிக்கப்படும். பின்பு இவை எண்ணியல் தரவுகளாக (digital data)  மாற்றி ஒன்றின் (ADC - Analog to Digital Converter) மூலம் மாற்றப்பட்டு சேமிக்கப்படும். பின்பு இத்தரவுகளில் உள்ள தேவையற்ற புள்ளிகள் நீக்கப்படும். மேலும் இவை பல்வேறு வடிகட்டிகள் (filters)  ஊடாக செலுத்தப்பட்டு படத்தின் வெளிர் நிர்ணயம் (white balance), நிறம் (colour) என்பன செம்மைப்படுத்தப்படும். இந்த செயற்பாடனது எண்ணியல் விம்ப நிரலாக்கம் (digital image processing) எனப்படும். இவ்வாறு செம்மைப்படுத்தப்பட்ட எண்ணியல் விம்பமானது (digital image) நினைவகத்தில் (memory card) சேமிக்கப்படும்.

பழைய புகைப்படச்சுருள் கமெராக்களில் (film camera) உணரி அமைந்து இருக்கும் இடத்தில் சுருள் (film) இருக்கும். ஆகவே சுருளின் மீது விம்பம் நேரடியாக பதிவாகும். நவீன எண்ணியல் கமெராக்களில், இந்த உணரி பட உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

உணரியானது மில்லியன் கணக்கான நுண்ணிய ஒளி உணர் புள்ளிகளால் (sensor points) ஆனது. இந்த நுண் உணர் புள்ளிகள் சிலிக்கான் சில்லுகளால் (chips) வடிவமைக்கப்பட்ட நிரல்களாலும் (columns), நிரைகளாலும் (rows) ஆன அணிகளாகும் (arrays). ஒவ்வொரு நுண் உணரிப்புள்ளியும் பிக்சல் (pixel) என அழைக்கப்படும். இவ்வாறான ஒரு மில்லியன் புள்ளிகளின் (one million pixel)  சேர்க்கையானது ஒரு மெகா  பிக்சல் (one megapixel) எனப்படும். உதாரணமாக ஒரு உணரி (sensor) 2048 நிரல்களாலும் (columns), 3072 நிரைகளாலும் (rows) ஆன அணியால் (array) வடிவமைக்கப்பட்டது எனில், அந்த உணரியானது 6291456 (2048 X 3072)  நுண் உணர்புள்ளிகளைக் (pixel) கொண்டிருக்கும். அதாவது இந்த உணரி 6291456 நுண் உணர்புள்ளிகளை (pixel) உள்ள ஒரு ஒளிப்படத்தை பதிவு செய்யும் திறன் உள்ளது. அண்ணளவாக இது 6.3 மெகா பிக்சல் (megapixel) ஆகும். மேலே குறிக்கப்பட்ட உணரியால் உருவாக்கப்பட்ட புகைப்படக்கருவியானது 6.3 மெகா பிக்சல் கமெரா எனப்படும் (6.3 MP Camera).


தற்காலக் கமெராக்களில் பொதுவாக CCD (charged coupled device), CMOS (complementary metal oxide semiconductor) என இரண்டு வகையான உணரிகள் (sensors) பயன்படுத்தப்படுகின்றன.  CMOS உணரியானது மிகவும் மலிவானது. மேலும் அது குறைந்த அளவிலான மின்னாற்றலில் (power) இயங்கக் கூடியது. CCD உணரியானது மிகத்துல்லியமான படங்களை உருவாக்கவல்லது. ஆனால் இதன் விலை அதிகம். மேலும் இதன் இயக்கத்திற்கு அதிக மின்னாற்றல் (power)  தேவை. ஆகவே CCD உணரியை உடைய கமெராக்களின் தரமும் விலையும் CMOS உணரியை உடைய கமெராக்களின் விலையையும் தரத்தையும் விட அதிகம்.

Wednesday, December 9, 2009

புகைப்படக்கருவிகளின் வகைகள்

இன்றைய இலத்திரனியல் சந்தைகளில்  பல்வேறு வகையான எண்ணியல் புகைப்படக் கருவிகள் (digital still cameras) விற்பனையாகின்றன. அவற்றை கீழ்க்காட்டியவாறு வகைப்படுத்தலாம்.

மிகச்சிறிய கமெராக்கள் (Ultra compact digital cameras)

இந்த வகைக் கமெராக்கள் பொதுவாக தரமான புகைப்படங்களை எடுக்க வல்லவை. மிகவும் சிறியவை, எடை குறைவானவை ஆகவே எடுத்துச் செல்ல இலகுவானவை. இவற்றை மேல் சட்டைப்பையில்(shirt pockets) எடுத்துச் செல்லமுடியும்.


மிகவும் சிறியனவாக இருப்பதால் குறைந்த அளவிலான வசதிகளே (features) இந்த வகைக் கமெராக்களில் இருக்கும். மேலும் இவற்றின் கட்டுப்பாட்டு பொத்தான்கள் (control buttons) சிறியனவாக இருக்கும். ஆகவே இவற்றை கையாள்வதில் சிறு சிரமங்கள் ஏற்படக்கூடும்.

கைக்கு அடக்கமான இந்தவகைக் கமெராக்கள் ஒப்பீட்டளவில் குறிச்சூட்டு (Point and Shoot digital cameras) கமெராக்களை விட விலை சற்று அதிகமானவை. உதாரணம் : Canon Powershot SD 950 IS.

குறிச்சூட்டு கமெராக்கள் (Point and Shoot digital cameras)


இந்த வகைக் கமெராக்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. இவை தரமான புகைப்படங்களை எடுக்க வல்லவை. இவை தன்னியக்கம் (automatic mode), பல்வேறு காட்சியமைப்பு (scene modes) வசதிகள் உள்ளவை. மேலும் கூடிய உருப்பெருக்கம் (Zoom), அதிகளவு  megapixel உள்ளவை.  இவற்றுள் சிலவற்றில் புகைப்படக் கலைஞர் கட்டுபடுத்தக்கூடிய வசதிகள் (manual controls) உள்ளன. பொதுவாக சிறியவை, எடை குறைவானவை. ஆகவே எடுத்துச் செல்ல இலகுவானவை.

இந்தவகைக் கமெராக்கள் மலிவானவை. பொதுவான பாவனைக்கும் , புகைப்படக் கலையை கற்க விரும்புவர்களுக்கும் இவை மிகச்சிறந்தவை. இவற்றில் உள்ள வசதிகளுக்கு ஏற்ப விலைகளில் வேறுபாடு இருக்கலாம். உதாரணம் : Sony Cybershot  DSC W290.

உயர்தரக் கமெராக்கள் (Advanced digital cameras)


இந்த வகைக் கமெராக்கள் அதிகளவான வசதிகள் உடையவை. புகைப்படக் கலைஞரின் விருப்பத்துக்கு ஏற்றவாறு இவற்றை சிறந்த முறையில் கையாளலாம்.  இவை தன்னியக்கம் (automatic mode), manual mode, பல்வேறு காட்சியமைப்பு (scene modes) வசதிகள் உள்ளவை. மேலும் அதி கூடிய உருப்பெருக்கம் (long telephoto zoom), அகலக் கோண வசதி (Wide angle), அதிகளவு  megapixel உள்ளவை. இவற்றின் வில்லைகள் (lens) மிகவும் தரம் வாய்ந்தவையாக இருக்கும்.  இவற்றில் சிலவற்றில் மேலதிக கருவிகளை இணைத்து (external flash, filter, converter lens etc) இவற்றின் திறனை அதிகரிக்க முடியும்.

ஒப்பீட்டளவில் இவை சற்று பெரியவை, கனமானவை, விலை அதிகமானவை. இந்த வகை கமெராக்கள் தொடக்கநிலை நிபுணத்துவ  புகைப்படக் கலைஞர்களால்(Skill levels between a professional and consumer)அதிகளவில் பாவிக்கப்படுகின்றன. உதாரணம் : Canon Powershot SX 20 IS.

தனி வில்லை பிரதிபலிப்பு கமெராக்கள் (Digital Single Lens Reflex cameras - DSLR)


புகைப்படக் கலையின் வளர்ச்சிக்கு வரப்பிரசாதமாக அமைந்தவை இவை. அதி சிறந்த வசதிகள் உள்ளவை. மிகத்துல்லியமான புகைப்படங்களை எடுக்கக்கூடியவை. இந்த வகைக் கமெராக்களின் வில்லைகளை தேவைக்கு ஏற்றவாறு மாற்றி பொருத்த முடியும் (interchangeable lens).  இவற்றின் கமெரா தனியாகவும்(body) வில்லை (lens) தனியாகவும் கிடைக்கும். வில்லையின் விலையானது காமெராவின் விலைக்கு ஒப்பானது. மேலும் இவற்றில் அதிகளவில் வெளியிணைப்பு கருவிகளை இணைத்து இவற்றின் திறனை விருப்பதிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியும்.

இவை அளவில் பெரியவை, கனமானவை, மிகவும் விலை அதிகமானவை. இந்த வகைக் கமெராக்கள் நிபுணத்துவ  புகைப்படக் கலைஞர்களால் அதிகளவில் பாவிக்கப்படுகின்றன. உதாரணம் : Nikon D300S.